சென்னையில் 2 ரவுடிகள் வெட்டிக் கொலை..!
சென்னையில் ரவுடிகள் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்த குற்றப் பதிவேடு குற்றவாளி அருணும் (25) அவரது நண்பரும் ரவுடியுமான படப்பை சுரேஷும் நேற்றிரவு கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்திருந்தனர்.
இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனங்களில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் அருண் மற்றும் சுரேஷை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர். இதில், படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த 2022ஆம் ஆண்டில் அருணின் காதலி சாயின்ஷாவை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்தது தெரியவந்தது. காதலியின் கொலைக்குப் பழிவாங்க அருண் திட்டமிட்டிருந்த நிலையில், சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு அருண் குமார் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனன் ஆகியோரைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆனால், அர்ஜுனனுக்குப் பதிலாக அருணுடன் சேர்த்து படப்பை சுரேஷைத் தவறுதலாக வெட்டிக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.





