--- --:--:-- --

பிரம்மாண்டமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு..!

1

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிப்பதாகக் கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. கும்பமேளா தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் இருந்து சாதுக்கள், அகோரிகள், மடாதிபதிகள் வருகை தந்து புனித நீராடினர்.

 

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகைள், பல்துறை வல்லுநர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

 

திரிவேணி சங்கமத்தில் நீராட, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்த நிலையில், பிரயாக்ராஜ் நகருக்கான விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

 

ரயில்களில் ஏசி பெட்டிகளில் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்களும் நிகழ்ந்தன.மகா கும்பமேளாவில் புனித நீராட நேரில் வர முடியாதவர்கள் தங்களது புகைப்படத்தை அனுப்பி வைத்து அதனை நீரில் நனைத்தும், உறவினருக்கு வீடியோ காலில் அழைத்து செல்போனை திரிவேணி சங்கமத்தில் தண்ணீரில் மூழ்கி எடுத்த நிகழ்வுகளும் அரங்கேறின.

 

கும்பமேளாவின் கடைசி நாள் என்பதால் பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவிப்பட்டன. இந்திய விமானப்படை சார்பில் விமான சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 45 நாட்களில் புனித நீராட பிரயாக்ராஜில் கோடிக்கணக்கானோர் கூடிய நிலையில், சில சோகமாக சம்பவங்களும் நடந்தன.

 

தை அமாவாசை நாளான கடந்த மாதம் 29 ஆம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். கடந்த 15 ஆம் தேதி நியூ டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல இருந்த ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon