--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை..!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் பரவலாக மிதமான மழை பெய்தது.

 

பாண்டவர் மங்கலம், நாலாட்டின்புதூர், திட்டங்குளம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, இனாம் மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. இந்த திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இதேபோன்று நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, சமாதானபுரம், தெற்கு பஜார், புதிய பேருந்து நிலையம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

 

மழை காரணமாக நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து. எனினும் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்நிலையில், கடலோர தமிழகம், உள்தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon