அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில் எஸ்.எம்.சி சார்பில் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு..!
அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளி எஸ்.எம்.சி சார்பில்
வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் என்.ஐ. ஜலாலுதீன் பங்கேற்பு..!
திருப்பூர், திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்.எம்.சி) சார்பில் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு பள்ளி வளாகத்தில் நடந்தது. கருத்தரங்கிற்கு பள்ளி அறிவியல் ஆசிரியை கவிதா தலைமை தாங்கினார். ஆசிரியர் முத்துக்குமார் வரவேற்றார்.
கோவை இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினரும், மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளருமான சந்துரு, சங்க உறுப்பினர் சஃபியுல்லா ஆகியோர் காடுகளின் நிலை மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிடிபட்ட சிறுத்தைபுலி குறித்து பேசினார்கள்.

கோவை இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் என்.ஐ. ஜலாலுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்திற்கு 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வெளிநாட்டு பறவைகள் வந்து, அடைகாத்து, குஞ்சு பொரித்து, பின்னர் அந்த குஞ்சுகளையும் அழைத்துச் செல்கிறது.
இந்த பறவைகளுக்கு என விமானம், கப்பல் கிடையாது. ஜி.பி.எஸ்., செல்போன் போன்ற எந்த கருவிகளும் இல்லை. ஆனால், அதன் சிறிய மூளையை வைத்துக் கொண்டு எந்தவித தடங்கலும் இல்லாமல் இவ்வளவு தூரம் வந்து செல்கிறது. உலகம் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வு தருவதற்காக வருடம் முழுவதும் பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
2012 ல் உலக நாடுகள் முழுவதும் யானைகளை அழியாமல் பாதுகாக்க புது சட்டம் கொண்டு வந்த பிறகு வனவிலங்கு வார விழா என ஒரு வாரம் கொண்டாடுகிறோம். தாத்தா காலத்தில் நீரை கிணற்றில் எடுத்தோம். நம் காலத்தில் பாட்டிலில் தண்ணீர் வாங்குகிறோம். வரும் காலத்தில் புதிய தலைமுறையினருக்கு தண்ணீர் எப்படி வரும் என தெரியவில்லை.
இயற்கைக்கு அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கையை பாதுகாப்பதன் மூலமே தண்ணீர் கிடைக்கும். நம் மூத்தோர் பாம்பு, எலி உள்பட பல்வேறு உயிரினங்களை நாம் சொன்னால் கேட்க மாட்டோம் என்று அந்த உயிரினங்களை ஒவ்வொரு சாமியுடன் இணைத்ததால் தற்போது நாம் அந்த உயிரினங்களை வணங்கி, பாதுகாத்து வருகிறோம்.
உயிரினங்கள் அனைத்தும் இயற்கையாக சுழற்சி முறையில் தங்களது உணவை தேடிக்கொள்ளும். 1972 ஆம் ஆண்டு போடப்பட்ட வனங்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்கியதன் விளைவாக 17 சதவீதம் காடுகள் இருந்த நிலை தற்போது காடுகளின் வளர்ச்சி 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. பூக்கள் அழகானது தான். ஆனால் அவைகள் மிக ஆபத்தானது. வீட்டில் நாட்டு பூக்கள், செடிகளை வளர்க்க வேண்டும்.
யானைகள் சென்ற வலசை பாதை தான் தற்போது தார் சாலையாக மாறி உள்ளது. யானைக்கு தமிழில் சங்க இலக்கியத்தில் 164 பேர்கள் உள்ளது. யானைகளின் உடல் பாகங்களான கண், காது, தும்பிக்கை, பாதம் மூலம் அதனுடைய அனைத்து செயல்பாடுகளையும் புரிந்து கொண்டு செயல்படுகிறது.
யானைகள் அட்டகாசம் என்று பேப்பரில் செய்திகள் வரும். ஆனால் மனிதர்கள் அத்துமீறி காட்டுக்குள் சென்று அந்த உயிரினங்களின் வாழ்விடத்தை அழிப்பதனால் தான் யானைகள் ஊருக்குள் நுழைந்து மனிதர்களை தாக்குகிறது. இயற்கையாக எல்லா உயிரினங்களுக்கும் அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப உணவுகள் கிடைத்து விடுகிறது. காடு இல்லை என்றால் மனிதன் உயிர் வாழ முடியாது.
இயற்கைக்கு தேவையான நாட்டு மரம், புல் வளர்க்க வேண்டும், அதனால் தான் காடுகள் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார். வன உயிரினங்கள் குறித்த சந்தேகங்கள், கேள்விகளுக்கு தலைவர் ஜலாலுதீன் பதில் அளித்தார்.
முன்னதாக இயற்கை பாதுகாப்பு சங்க செயலாளர் அனாஸ் அஹமது, ஒருங்கிணைப்பாளர் அஸ்கர் அஹமது, ரமீத், பிரஜித் கண்ணா, சாய் பிரசாத், முஹம்மது சியாஸ், சந்தோஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் காட்டு விலங்குகள், அதன் இருப்பிடம், செயல்பாடுகள் குறித்த விடியோ தொகுப்பினை ஒளிபரப்பினர். முடிவில் பள்ளி மாணவி லக்ஷனா நன்றி கூறினார். கருத்தரங்கில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.






