--- --:--:-- --

கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!

9

மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் மட்டுமே மனித  வனவிலங்குகள் மோதலை தடுக்க முடியும். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ் பேச்சு..!

 

கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் வனவிலங்குகளின் அறிய புகைப்படங்கள் அடங்கிய 2025 காலண்டர் வெளியீட்டு விழா, மனித – வன விலங்கு மோதல் குறித்த கருத்தரங்கு மற்றும் வனவிலங்கு புகைப்பட கண்காட்சி விழா என்னும் முப்பெரும் விழா கோவை ஹோப் காலேஜ் அருகில் உள்ள காமராஜர் ரோடு கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கோவை கிளஸ்டர்ஸ் மீடியா காலேஜ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

 

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது : தமிழக எல்லை பகுதியில் தொடங்கி காருண்யா, கிருஷ்ணா, மருதமலை, ஈஸா, சைதன்யா, ஐ.டி.கம்பெனிகள் அரசு துறைகள் என பவானி சாகர் வனப்பகுதி வரை வனப்பகுதி ஆக்கிரமிப்புகள் உள்ளன. யானை உட்பட வன விலங்குகள் அனைத்தும் தங்கள் பகுதிக்குள் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு இயற்கையாக புலம் பெயர்த்து வரும்.வனவிலங்குகள் மனிதன் வசிக்கும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது இல்லை. நாம் தான் வனவிலங்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளோம்.

 

இன்று பத்திரிகைகளை திறந்தாலே தினமும் மனிதன் மற்றொரு மனிதனை தாக்கும் செய்தி பிரதானமாக வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் வனவிலங்குகள் மனிதனை தாக்கியது என்ற செய்தி ஓரிரு செய்தியாக தான் வருகிறது. இதனை மனிதர்கள் தாங்கிக்கொள்ள மறுக்கிறார்கள். வனவிலங்குகள் மனிதனை தாக்கி விட்டது. துரத்துகிறது. தொந்தரவு செய்கிறது. என்று தான் பேசுகிறார்கள்.

 

மனிதன் மனிதனை தாக்கி கொள்கிறான் என்றால் அதற்கான சட்டங்கள், போலீஸ், வழக்குகள், கோர்ட் போன்றவற்றின் மூலம் விசாரணை நடத்தி யார் மீது குற்றம் இருக்கிறதோ அவரை தண்டிக்க சட்டம் இருக்கிறது. ஆனால்,வனவிலங்கு மனித மோதலில் நாம் யாரை தண்டிப்பது? வன விலங்குகளை தண்டிக்க முடியுமா? சட்டத்தில் இடம் இருக்கிறதா? இல்லை. அதே சமயம் வனவிலங்குகளை கற்களாலும் பட்டாசுகள் மூலமும் ஒருவித தாக்குதலை மக்கள் கொடுத்து விரட்டுகிறார்கள். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை தாக்குகிறான் என்றால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

ஆனால், விலங்குகள் மனிதனை தாக்க என்ன காரணம்? வனவிலங்குகள் காலையில் எழுந்தவுடன் இந்த மனிதனை தாக்கலாம் என்று திட்டமிட்டு வருவதில்லை. வனவிலங்குகளுக்குள் சுய ஒழுக்க கட்டுப்பாடு உள்ளதால் யாரையும் தாக்குவதில்லை. அரசு அனுமதியுடன் வனப்பகுதியில் தங்கி இருக்கும் மலைவாழ் மக்கள் வனவிலங்குகளை போற்றுகிறார்கள். அவர்களை வனவிலங்குகள் தொந்தரவு செய்வதில்லை இதற்கு உதாரணமாக, சின்னத்தம்பி, விநாயகர் ஆகிய இரண்டு யானைகளை நாம் கூறலாம்.

 

இந்த யானைகள் இன்றும் மக்கள் பகுதிக்கு சென்று வருகிறது. இதுவரைக்கும் மனிதர்களை தாக்கியதாக சரித்திரம் இல்லை. எப்படி மனிதனுக்கு கோபத்தன்மை உள்ளதோ அதேபோல் விலங்குகளுக்கும் அந்த தன்மை வரும். அப்பொழுது தான் மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. மனிதன் வனவிலங்குகளை தொந்தரவு செய்வது மூலமும், வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதால் மட்டுமே வனவிலங்குகளுக்கு கோபம் ஏற்பட்டு தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மனிதன் மீது தாக்குதலை தருகிறது.

 

அதனால் நாம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காட்டு பகுதிகளுக்குள்ளோ வனப்பகுதிகளுக்குள்ளோ இடங்கள் வாங்காமல் மனிதன் வசிக்கும் பகுதியில் இடம் வாங்கி வசிக்கும் நிலைக்கு மக்கள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து வனவிலங்குகளின் அறிய புகைப்படங்கள் அடங்கிய 2025 காலண்டரை விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள் அனைவரும் வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து பிளாக் ஷீப் அமைப்பின் நிர்வாக இயக்குனரும் பிரபல தமிழ் நடிகர் மற்றும் சிரிப்பு நடிகருமான ஆர்.ஜே விக்னேஷ்காந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது : வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பது ஒரு மிகப்பெரிய கலை. வனவிலங்குகள் புகைப்படங்களாக எடுக்கப்படுவதில்லை. அது அதாகவே அமைவது. மூன்று வினாடிகளுக்கு முன்பும், மூன்று வினாடிகளுக்கு பின்பும் எடுக்கப்படும் போட்டோக்கள் இந்த மாதிரி அமைவதில்லை. அந்த சரியான வினாடியில் எடுக்கப்படும் போட்டோக்களே சிறந்ததாக அமையும். இந்த புகைப்படங்களுக்காக இவர்கள் எவ்வளவு நாள் காத்திருந்தார்கள் என்பது நமக்கு தெரியாது.

 

ஒவ்வொரு புகைப்படத்திற்கு பின்பும் 6 மணி நேரம் முதல் 10 நாட்கள் வரை காத்திருந்து எடுத்திருப்பார்கள் என்பதே எதார்த்தமான உண்மை. வனவிலங்குகளை நாம் நினைக்கும் நேரத்தில் வேறு பகுதிக்கு அப்புறப்படுத்த முடியாது. துரத்தி அடிக்க முடியாது. மனிதனை தாக்கும் பொழுது வனவிலங்குகளை வில்லனாக சித்தரிக்கிறார்கள். இங்கு பேசிய முக்கிய விருந்தினர்கள் அனைவரும் தங்களுடைய பல ஆண்டுகால அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்தார்கள். கோவை இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜலாலுதீன் யானை பாகனாக வாழ்வை தொடங்கி கடந்த 40 ஆண்டுகளாக வனவிலங்குகளுடன் பழகி ஒவ்வொரு விலங்குகளைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைப்பதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை ஒரு அமைப்பாக ஏற்படுத்தியும் செயல்படுத்தி வருகிறார்.

 

அவருக்கும், அவரது மகன்களும், வனவிலங்கு புகைப்பட கலைஞர்களாகிய அனாஸ் அஹமது, ஷகீல் அஹமது, அஸ்கர் அஹமது மற்றும் அவர்களது அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. என்றார். தொடர்ந்து பொதுப்பணித்துறை கோவை மண்டல நிர்வாக பொறியாளரும், வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான நித்தியன்மணியரசு பேசியபோது புகைப்படங்கள் எடுத்ததன் நோக்கம், அதனால் ஏற்பட்ட சிரமங்களையும், எடுத்தபிறகு ஏற்பட்ட மகிழ்ச்சி குறித்து வர்ணித்து விளக்கி பேசினார்.

அசோக் டிராவல்ஸ் டைரக்டர் ரத்னா வர்ஷினி, வனவிலங்கு ஆராய்ச்சியாளர் மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் கோவை இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன் நன்றி கூறினார். கூட்டத்தில் கோவை ராமகிருஷ்ணா பெண்கள் கல்லூரி பி எஸ் ஜி கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon