--- --:--:-- --

புதிதாக 2 அடக்கஸ்தலம் அமைக்க இடம் வேண்டும் : துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து திருப்பூர் ஐக்கிய ஜமாஅத் கோரிக்கை

1

திருப்பூர் காதர்பேட்டை ஆஸாத் வீதியில் செயல்பட்டு வரும் திருப்பூர் வடக்கு ஐக்கிய ஜமாஅத் சார்பில் அதன் தலைவர் முகமது ஹசன், செயலாளர் முகம்மது ரஃபி, பொருளாளர் அஜ்மத்துல்லா, மாவட்ட செயலாளர் அலாவுதீன் ஆகியோர் திருப்பூர் கலெக்டர் வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைநேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

 

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து அவிநாசி வழியாக ஒருபுறம் அம்மாபாளையம் வரை மற்றும் பெருமாநல்லூர் வழியாக கணக்கம்பாளையம் வரை சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன.

 

இந்த பகுதியில் மட்டும் முஸ்லிம் மக்கள் சுமார் 20,000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆனால் இவர்களில் யாராவது இறந்தால் அடக்கம் செய்ய போதுமான இடங்கள் இல்லை. வடக்கு பகுதியில் மொத்தம் மூன்று அடக்கஸ்தலம் தான் உள்ளது. இதில், இரண்டு அடக்கஸ்தலத்தில் மண்ணின் மக்கும் தன்மை கெட்டு போனதால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது.

 

ஆகவே புதிதாக இரண்டு அடக்கஸ்தலம் அமைக்க இடம் வேண்டும். மேலும், மக்கிப்போன இரண்டு அடக்கஸ்தலத்தில் புதிய மண் கொட்டி சீரமைக்க அரசு செலவில் உதவி புரிய வேண்டும். அதேபோல், திருப்பூரில் பிரதான பகுதியான அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஜன்னத்துல் பக்கி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அடக்கஸ்தலத்தில் 2 ஏக்கர் இடம் உள்ளது. இங்கும் மண் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

 

இரவு நேரத்தில் அடக்கம் செய்ய ஏதுவாக மாநகராட்சி நிர்வாகம் மூலம் மின்விளக்குகள் அமைத்து உதவி புரிய வேண்டும். மேலும், அங்குள்ள மண் சாலைகளை சிமெண்ட் சாலை அல்லது தார் சாலையாக அமைத்து தர வேண்டும். திருப்பூர் எல்லை பகுதியில் உள்ள கணக்கம்பாளையம், நாதம்பாளையம், பாரதி நகர், படையப்பா நகர், அறிவொளி நகர், தோட்டத்துபாளையம் ஆகிய பகுதிகளில்வசித்து வரும் இஸ்லாமிய மக்கள் இறந்து போனால் அடக்கம் செய்ய திருப்பூர் மையப்பகுதிக்கு தான் வர வேண்டும்.

 

ஏழை எளிய மக்கள் அங்கிருந்து வருவதற்கு பெரும் பொருளாதார செலவு ஏற்படுகிறது. ஆகவே அந்தப் பகுதியிலேயே அரசுக்கு சொந்தமான இடத்தை ஒதுக்கி தருவதுடன், பள்ளிவாசல்களுக்கு சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றிலிருந்து விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. . இதனை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படித்து பார்த்ததுடன், மனு கொடுத்தவர்களிடமும் விளக்கம் கேட்டு பின்னர் இதுகுறித்து ஆவண செய்வதாக உறுதி அளித்து சென்றார்.

Right Menu Icon