விஷ சாராய வழக்கு..உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
கள்ளக்குறிச்சி விஷசாராயம் மரண வழக்கு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷசாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக வழக்கறிஞரணி செயலாளர் இன்ப துரை சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏற்காடு மோகன் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம் எல் ஏ ஸ்ரீதரன் ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்பொழுது அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐஎஸ் தரப்பில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டுவரப்பட்டுள்ளதால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் இது போன்ற சம்பவங்கள் தொடர்வதால் அரிதான வழக்காக இந்த கருதி சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் கே.பாலு தரப்பில் வாதிடப்பட்டது.
பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் தரப்பில் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் அரசியல்வாதிகள் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து கொண்டு வந்து விற்க முடியாது என்றும் விசாரணை நியாயமான முறையில் நடைபெற வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.





