--- --:--:-- --

மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும் – பள்ளிகளுக்கு உத்தரவு

2

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வங்க கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி எந்தெந்த பகுதிகளில் மழை பெய்து வருகிறதோ அந்த பகுதியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று விபரம் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் மாணவர்கள் வருகை தந்து விட்டால் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவித்து மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல் மழை பெய்யாத பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பான முறையில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon