கியூபாவில் மின் நிலையங்களில் பழுது..மின் விநியோகம் துண்டிப்பு..!
கரீபியன் தீவு நாடான கியூபாவில் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தவித்தனர்.
மேற்கு மாகாணங்களில் உள்ள மின் நிலையங்களில் இந்த பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சீரான மின் வினியோகம் எப்பொழுது வழங்கப்படும் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே அந்நாட்டில் உணவு, மருந்து, எரிபொருள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தற்போது மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.






