ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. 6 மணி நிலவரப்படி 65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து, வரும் அக்டோபர் 8ஆம் தேதி, ஹரியானா தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் உள்ளிட்டவற்றை தேர்தல் களத்தில் எழுப்பி காங்கிரஸ் கட்சி வாக்கு சேகரித்தது. இதை தவிர, முன்னாள் பாஜக எம்பியும் முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் நடத்திய வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது காங்கிரஸ்.
மாலை 5 மணி நிலவரப்படி அம்பாலா மாவட்டத்தில் 62.26 சதவிகித வாக்குகளும் பிவானி மாவட்டத்தில் 63.06 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மெவாட்டில் 68.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக குர்கானில் 49.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.





