--- --:--:-- --

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு போலீசாரிடம் வாக்குமூலம்!

7

மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில்தான் பேசியதாகவும் சித்தர்களே தன்னை வழிநடத்துவதாகவும் பிற்போக்கு பேச்சாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மாணவிகள் இடையே மூடநம்பிக்கைளை விதைக்கும் வகையில் மகாவிஷ்ணு பேசியது சர்ச்சைக்குள்ளானது. மேலும், பாவ புண்ணியங்கள் குறித்து பேசி மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கடும் கண்டனம் எழுந்தது.

 

இது தொடர்பாக மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணு, சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

 

அவரிடம் நடத்திய விசாரணையில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கிலேயே தான் பேசியதாக மகாவிஷ்ணு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

 

சித்தர்கள் தன்னிடம் பேசுவார்கள் என்றும் அவர்களே தன்னை வழிநடத்துவதாக மகாவிஷ்ணு கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீதிபதி முன் ஆஜர்படுத்தியபோது தான் தவறாக எதுவும் பேசவில்லை என்று மகாவிஷ்ணு கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

ஏற்கனவே மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருவொற்றியூர் காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon