17 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக வரும் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை தெரிவித்துள்ளது.
வரும் 27-ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 17 நாட்கள் அங்கு மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, அடுத்த மாதம் 12-ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னையில் இருந்து 27-ம் தேதி புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 28-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ சென்றடைகிறார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள முக்கிய முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை அடுத்த மாதம் 2-ஆம் தேதிவரை சந்தித்துப் பேசுகிறார்.இதில், முதலீட்டாளர்கள் மாநாட்டில் வரும் 29-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
மேலும், அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழக மக்களுடன் முதலமைச்சர் கலந்தாய்வு மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, 2-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ-விலிருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர், 12-ஆம் தேதிவரை அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார்.
முக்கிய 500 நிறுவனங்கள் பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை அவர் சந்தித்துப் பேச உள்ளார். மேலும், வெளிநாடு வாழ் தமிழர்களுடனான நிகழ்ச்சியில் 7-ஆம் தேதி கலந்துகொள்கிறார்.
உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, முதலமைச்சர் 17 நாள் சுற்றுப்பயணம் அமைய உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை தகவல் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




