திருப்பூரில் 19 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்..!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் திருப்பூர் மண்டலம் சார்பில் 19 புதிய அரசுப்பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , ஆதிதிராவிடர் நலத்துறை என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் .ந.தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்துறைகளின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, போக்குவரத்துத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் விடியல் பயணத்திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை கோட்டத்தில் 422 நகர பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றிற்கு சுமார் 1.79 இலட்சம் மகளிர்கள் தினசரி கட்டணமில்லா பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகழகத்தின் சார்பில், திருப்பூர் மண்டலத்திற்கு 2021-2024 ஆண்டிற்கு நகர்ப்புறத்திற்கு 8 பேருந்துகளும், புற நகரத்திற்கு 39 பேருந்துகளும் என 47 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்துகளில் தற்போது வரை 28 புதிய பேருந்துகள் கூண்டு கட்டுமானப்பணிகள் முடிவுற்று தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டு வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், 17 புறநகர் பேருந்துகளும், 2 நகர பேருந்துகளும் என 19 பேருந்துகள் கூண்டு கட்டுமானப்பணிகள் முடிவுற்று இன்றைய தினம் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது. மேலும், 2023-2024 ஆம் ஆண்டிற்கு திருப்பூர் மண்டலத்திற்கு 26 பேருந்துகள் புனரமைக்கப்படவுள்ளது. தற்போது வரை 12 புறநகர் பேருந்துகளின் கூண்டு கட்டுமானப்பணிகள் முடிவுற்று புதிய தோற்றப் பொலிவுடன் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதர பேருந்துகள் விரைவில் கட்டுமானப்பணிகள் முடித்து வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி மண்டலக்குழுத்தலைவர்கள்
இல.பத்மநாபன் (4 ஆம் மண்டலம்),கோவிந்தராஜ் (2-ஆம் மண்டலம்) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கோவை மண்டலம்) மேலாண்மை இயக்குநர் ஜோசப் டயாஸ், பொது மேலாளர் (திருப்பூர் மண்டலம்) செல்வகுமார், துணை மேலாளர்கள் ராஜேந்திரன், ஜோதி மணிகண்டன், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





