கள்ளச்சாராய மரணம்..எதிர்க்கட்சிகள் விமர்சனம்..!
கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் திமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ச்சியாக தான் சுட்டிக்காட்டி வந்தோம்.
ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சாடியுள்ளார். கள்ளச்சாராயம் இல்லை மெத்தனல் என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல் கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள குறிப்பில் மரக்காணம், மதுராந்தகம் போன்ற பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 உயிர்களை பறிகொடுத்து ஒரு வருடமே ஆன நிலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
டாஸ்மாக் மது விற்பனைக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுவதாக கூறியிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும் அரசு முடங்கி கிடப்பதாக சாடினார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் சட்டவிரோத மதுபான தயாரிப்பை தடுப்பதில் குறைபாடுகள் தொடர்வதாகவும் கூறி இருக்கிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





