பாஜகவின் அடுத்த பிரச்சார திட்டம் – தமிழ்நாடு வரும் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், பாஜக தலைமையிலான இந்திய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காணுகிறது. குறிப்பாக 24 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. எஞ்சிய 15 தொகுதிகள் பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அக்கட்சியில் வேட்பாளர்கள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த சூறாவளி பிரசாரத்தில் சென்னை, கோவை, மதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களுக்காக பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வழக்கமாக தேர்தல் நேரங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து கூட்டணி, தேர்தல் முன்னேற்பாடுகள் உட்பட பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொடுப்பார்.
ஆனால், இந்த முறை கூட்டணி விவகாரம் தொடர்பாக நேரடியாக தமிழ்நாட்டில் எந்தவித பேச்சு வார்த்தையிலும் அவர் ஈடுபடவில்லை. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு தேர்தல் காரணங்களுக்காக முதல்முறையாக அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகிறார். இதனால், பாஜக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




