--- --:--:-- --

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

1.1

திருவாடானை அருகே குஞ்சம்குளம் ஊராட்சி, கீழக்கோட்டை கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து நேற்று இரவு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே குஞ்சம்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கோட்டை , தின்னைக்காத்தான் வயல் , கண்ணம்புஞ்சை, சீந்திவயல் உள்ளிட்ட கிராமங்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

 

இக்கிராமங்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பைப் லைன் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில் கீழக்கோட்டை கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. அதை பழுது பார்க்காததால் குடிநீர் வினியோகம் செய்யவில்லை.

 

குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த கீழக்கோட்டை கிராம பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு 8 மணியளவில் காலி குடங்களுடன் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த இரண்டு மாத காலமாக மிகக் குறைவான அளவில் தண்ணீர் வந்த நிலையில் தற்போது 15 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒரு செட்டு தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் கண்டு கொள்வதில்லை. எங்கள் பகுதியில் தார் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வர முயற்சித்தாலும் இந்த சாலையில் வர மறுக்கின்றனர். அந்த அளவுக்கு மோசமான நிலையில் சாலை உள்ளது.

 

இதுகுறித்து எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.விடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர் கண்டு கொள்வதில்லை. ஓரிருநாளில் சீராக குடிநீர் வழங்காவிட்டால் , திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து கலைந்து சென்றனர்.

Right Menu Icon