--- --:--:-- --

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!

1

திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் புகாரில் கைதான ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி ஹீமபிந்து உத்தரவிட்டுள்ளார்.

 

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். பரபரப்பான சூழலில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் நடந்ததாக பதிவான வழக்கில் கைதான ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

 

நந்தியாலா பகுதியில் சனிக்கிழமை காலை சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் 9 மணிநேரம் சாலை மார்க்கமாக விஜயவாடாவுக்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச்செல்லப்பட்டார்.

 

ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணை அலுவலகத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சரிடம் விடியவிடிய விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

அதனைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் சந்திரபாபு ஆஜர்படுத்தப்பட்டார். காலை 7 மணி முதல் தீவிர, வாத பிரதிவிவாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon