--- --:--:-- --

கரையை கடக்கும் பைபர்ஜாய் புயல்..குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

2

ரபிக்கடலில் உருவாகியுள்ள பைபர்ஜாய் புயல் நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் குஜராத்தில் 37,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பைபர்ஜாய் புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

கட்ச், சவுராஷ்டிரா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், மோர்பி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் வசித்து வந்த சுமார் 37,000 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அம்ரேலி மாவட்டம் சியால்பெத் கிராம மக்களுக்கு படகுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டன. துவாரகாவில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த செல்போன் டவர் முன்னெச்சரிக்கையாக இடிக்கப்பட்டது. மேலும், முப்படை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பைபர்ஜாய் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன.

Right Menu Icon