செந்தில் பாலாஜி என்ன உத்தமரா – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் மூன்று முக்கியமான குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில் பணம் வாங்கி தருவதாக பணம் பெற்ற வழக்கு காரணமாக அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளனர் . இது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு தான். இது புதிதல்ல ஏற்கனவே நடந்த சம்பவம் தான்.
இந்த விவகாரத்தில் சமீபத்தில் தீர்பளித்த உச்சநீதிமன்றம் 60 நாட்களில் இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியது. அப்படி 60 நாட்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அதிகாலையில் செந்தில் பாலாஜி கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சோதனை நடந்த போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என பேட்டிக்கொடுத்தார். அப்படி என்றால் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது தானே. அப்படி கொடுத்திருந்தால் இந்தப்பிரச்னையே வந்திருக்காது. இதில் எதோ கண்டுபிடித்துவிட்டார்கள்.
தனக்கு எதாவது பாதிப்பு ஏற்படும் என்பதால் செந்தில் பாலாஜி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அமைச்சரும் முதலமைச்சரும் பதறிப்போயி இருப்பது அந்த ரூ.30,000 கோடி குறித்து பாலாஜி எதாவது வாய் திறந்து கூறிவிட்டால் தங்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தான் ஓடோடி போய் பார்க்கிறார்கள்.
செந்தில் பாலாஜி மேல் இருக்கும் அக்கறையில் போய் பார்க்கவில்லை. இவர்களை பாதுகாக்க செந்தில் பாலாஜியை சந்தித்து ஆறுதல் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் நடக்கின்ற சம்பவம். தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்” என்றார்.





