மணீஷ் சிசோடியாவை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டம் – ஆம் ஆத்மி அறிவிப்பு
மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. டெல்லி மாநிலத்திற்கான புதிய மதுக் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக துணை முதலமைச்சர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது குறித்து சிஸ்சோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி கைது செய்தனர். தங்கள் கேள்விகளுக்கு சிசோடியாவின் பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே கைது செய்ததாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக விசாரணைக்கு சிபிஐ அலுவலகம் செல்லும் முன்பு சிசோடியாவும் அவரது ஆதரவாளர்களும் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா தான் கைது செய்யப்படக்கூடும் என தெரிவித்திருந்தார்.
துணை முதலமைச்சரிடம் விசாரணை நடைபெறுவதால் சிபிஐ அலுவலகத்தை சுற்றி நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சி இந்த நாள் ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்று அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் சிசோடியாவின் கைதை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.





