ஆளுநர் ரவி அரசியல் கட்சி பிரமுகர் போன்று செயல்படுகிறார் -பொன்முடி குற்றச்சாட்டு
ஆளுநரின் சபையின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் பதவிக்குரிய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்திற்கு பொது நபராக செயல்படாமல் ஒரு அரசியல் கட்சி பிரமுகர் போன்று செயல்பட்டு வருவதை மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை கொள்கைக்கு மாறாக சனாதன தர்மம் தொடர்பாக பேசி ஒரு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் போலவே செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
மதரீதியாக பேசுவது, திருக்குறளைப் பற்றி தேவையற்ற கருத்துக்களை தெரிவிப்பது, தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் சிக்கியது என ஆளுநர் மீதான விமர்சனங்களை சுட்டிக்காட்டி அமைச்சர் பொன்முடி தற்போது கார்ல் மார்க்ஸ் பற்றிய ஆளுநரின் கருத்துக்கும் கண்டனம் தெரிவித்தார்.






