8-ம் வகுப்பு மாணவி 9 மாத கர்ப்பம்!
13 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார் 63 வயதான முதியவர். பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பதறிப்போன பெற்றோர் ஒரு சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தபோது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .சிறுமியின் தாயாருக்கு தெரிந்த முதியவர் ஒருவர் அந்த சிறுமிக்கு இழைத்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் 13 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கமாக பள்ளிக்கு சென்று வந்த மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பயந்துபோன பெற்றோர் செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்போதுதான் அந்த சிறுமி 9 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது அவர் படிக்கும் பள்ளிக்கூடம் அருகே வசிக்கும் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நடராஜன் என்ற 63 வயது முதியவர் இந்த கொடுமையை இழைத்தது தெரியவந்தது.
சிறுமியின் தாய்க்கு தெரிந்தவர் என்பதாலும் பள்ளிக்கூடம் அருகே அவரது வீடு இருந்ததாலும் அந்த சிறுமி அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். நடராஜனும் அந்த சிறுமிக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் மாணவி அடிக்கடி தனது வீட்டிற்கு வருவதை பயன்படுத்தி நடராஜன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் செய்யாறு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதேபோன்று சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் குழந்தைகளிடம் அத்துமீறிய முதியவர்கள் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவடியை அடுத்த ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான நாகராஜ். இவரது வீட்டின் அருகே கணவனை இழந்த பெண் ஒருவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு சென்றுள்ளார். குழந்தை வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த நாகராஜ் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி சென்று நாகராஜை பிடித்து தர்மஅடி கொடுத்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆவடி கோவில்பதாகை பகுதியை சேர்ந்தவர் 53 வயதான பாலசுப்பிரமணியம் என்ற ரவி சர்மா. இவர் அதே பகுதியில் சிறுவர் சிறுமியருக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் பரத நாட்டிய வகுப்பிற்கு வந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ரவி ஷர்மா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகளிடம் முதியவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.






