--- --:--:-- --

8-ம் வகுப்பு என்.எம்.எம்.எஸ் தேர்வு..!

9

த்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய அதேசமயம் கல்வியில் சிறந்து விளங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காகத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான தேர்வு கடந்த ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தற்போது இத்தேர்வின் முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தமிழகம் முழுவதும் மொத்தம் 6,695 எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெறத் தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, தென் மாவட்டங்கள் இத்தேர்வில் பெரும் சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 659 மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் 424 மாணவர்களும், கன்னியாகுமரியில் 409 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை, தூத்துக்குடியில் 391 மாணவர்களும், சேலத்தில் 355 மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா 342 மாணவர்களும், கோயம்புத்தூரில் 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் இருந்து 150 மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

 

அரசு வெளியிட்டுள்ள இடஒதுக்கீடு வாரியான தரவுகளின்படி, பொதுப் பிரிவில் 2,075 மாணவர்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (BC) 1,774 மாணவர்களும், பி.சி.எம் (BCM) பிரிவில் 234 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (MBC) 1,339 மாணவர்களும், பட்டியலினப் பிரிவில் (SC) 1,005 மாணவர்களும், எஸ்.சி.ஏ (SCA) பிரிவில் 201 மாணவர்களும், பழங்குடியினப் பிரிவில் (ST) 67 மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.

 

இந்தக் கடினமான தேர்வில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் பாடப்புத்தகங்களில் உள்ள கணிதத்தில் 29 பாடங்கள், அறிவியலில் 37 பாடங்கள் மற்றும் சமூக அறிவியலில் 57 பாடங்கள் என மொத்தம் 123 பாடங்களில் முழுமையான அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் திட்டத்தின் விதிகளின்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும்.

 

தற்போது தேர்ச்சி பெற்றுள்ள இந்த மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம் ரூ. 1,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கல்வி உதவித்தொகையைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கப் பெரும் துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Right Menu Icon