மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நடந்தே வந்த 7 இளைஞர்கள்! கொரொனா தொற்று இல்லை!
திருச்சிக்கு நடந்தே வந்த தமிழக இளைஞர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று அடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் வேளாண் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். இதில் திருவாரூரை சேர்ந்த விஜயன், ராகுல், நித்தீஷ், ஜெகன் மற்றும் நாகையை சேர்ந்த சோபன்பாபு, வரதன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது. இவர்கள் பணியாற்றும் நிறுவனமும் தங்கியிருந்த விடுதியின் திடீரென மூடப்பட்டன. இதனால் தங்குவதற்கு இடமும், உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்த இளைஞர்கள் நடந்தே தமிழகம் செல்வது என முடிவெடுத்தனர். அதன்படி 29ம் தேதி இரவு சோலாப்பூரில் இருந்து தங்களது ஆயிரம் கிலோமீட்டர் நடை பயணத்தை தொடங்கி விட்டன.
இளைஞர்கள் பேருந்து வசதிகள் இல்லாததால் எண்ணெய் மற்றும் காய்கறி சரக்கு லாரி போன்ற வாகனங்களில் மாறி மாறிப் பயணித்து உடல் வியர்க்க நெடுந்தூரம் நடந்து கர்நாடக தமிழக எல்லைப் பகுதியை வந்தடைந்தனர். பின்னர் தட்டுத்தடுமாறி சனிக்கிழமை மதியம் திருச்சி வந்த போது இவர்கள் சோர்வுற்று அங்கேயே மயங்கினர்.
இதனை அவ்வழியாக காரில் சென்ற செந்தில், அருண் ஆகியோர் பார்த்தபின்பு இவர்களிடம் தகவல் சேகரித்து உடனடியாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர். மேலும் இளைஞர்கள் அனைவரையும் திருவாரூருக்கு காரில் அழைத்து வருவதற்கும் அனுமதி கேட்டுப் பெற்றனர். ஒருவழியாக திருவாரூர் வந்த இளைஞர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என நேற்று இரவு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






