--- --:--:-- --

61% நிலப்பரப்புக்கு நிலநடுக்க ஆபத்து?

5

ந்தியாவின் புவியியல் வரைபடத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இது வெறும் கோடுகளின் மாற்றம் அல்ல; நம் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்ய வைக்கும் எச்சரிக்கை மணி. இந்திய தர நிர்ணய அமைகம் (BIS) வெளியிட்டிருக்கும் புதிய நிலநடுக்க வடிவமைப்பு விதிகளின்படி, இந்தியாவின் 61% நிலப்பரப்பு இப்போது மிதமான முதல் அதிக நிலநடுக்க ஆபத்து உள்ள பகுதிகளாக மாறியுள்ளது. இதில் மிக முக்கியமாக, நாம் இதுவரை பாதுகாப்பானதாக நினைத்த அல்லது குறைந்த ஆபத்து என்று கணித்த இமயமலை பகுதிகள், இப்போது ‘மண்டலம் VI’ என்னும் உச்சக்கட்ட ஆபத்து வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

 

இதுவரை இமயமலைப் பகுதிகள் மண்டலம் IV மற்றும் V எனத் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால், பூமிக்கடியில் நடக்கும் மாற்றங்கள் அப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை. மத்திய இமயமலைப் பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளாகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படவில்லை என்பதால், அங்கு ஆபத்து குறைவு எனப் பழைய வரைபடங்கள் கணித்திருந்தன. ஆனால், அந்த நீண்ட அமைதிதான் இப்போது மிகப்பெரிய ஆபத்தாகப் பார்க்கப்படுகிறது.

 

இமயமலை ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறது? காரணங்கள் நம்மை வியக்க வைக்கின்றன: பூமிக்கடியில் இந்தியப் புவித்தட்டு (Indian Plate), யூரேசியத் தட்டுடன் (Eurasian Plate) இடைவிடாமல் மோதிக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 5 செ.மீ வேகத்தில் வடக்கே நோக்கி நகரும் இந்தத் தள்ளுதல்தான் இமயமலையை இன்னும் உயரமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

பல நூற்றாண்டுகளாக நிலநடுக்கம் ஏற்படாத இடங்களில், பூமிக்கடியில் பயங்கரமான ஆற்றல் (Stored Energy) தேங்கியுள்ளது. இது ஒரு ஸ்பிரிங் போல அழுத்தப்பட்டு இருக்கிறது. இந்த அழுத்தம் எப்போது வேண்டுமானாலும் பெரிய நிலநடுக்கமாக வெடிக்கலாம். புதிய விதிகளின்படி, இனி “இது மாநில எல்லை, இது மாவட்ட எல்லை” என்று நிர்வாக ரீதியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. புவியியல் ரீதியாக எங்கு ஆபத்து உள்ளதோ, அதுவே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக, டேராடூன் போன்ற நகரங்கள் மற்றும் இமயமலையின் அடிவாரப் பகுதிகள் இப்போது அதிகக் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன.

 

இனி உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கட்டப்படும் பாலங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சாதாரணமானதாக இருக்க முடியாது. அவை நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமை கொண்டதாக (Retrofitting) மாற்றப்பட வேண்டும். மென்மையான மண் உள்ள இடங்களிலும், பூமிக்கடியில் விரிசல் உள்ள இடங்களிலும் புதிய கட்டுமானங்களை விரிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்த புதிய வரைபடம் கட்டளையிடுகிறது.

 

நகர்ப்புறங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், இந்த புதிய வரைபடம் இந்தியாவிற்கு ஒரு ‘வேக்-அப் கால்’ (Wake-up call). இயற்கை எப்போது வேண்டுமானாலும் தன் கோர முகத்தைக் காட்டலாம்; அதற்கு நாம் எந்த அளவு தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது.

Right Menu Icon