மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் வழங்கப்படும்!
ஒடிசாவில் கொரொனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும். உயிரிழந்தோரின் சடலங்கள் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருத்துவ பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அவர்களின் பணியை அவமதிக்கும் வகையிலும் செயல்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்கள் தியாகிகளாக கருதப்பட்டு அரசு மரியாதையுடன் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்படும் என கூறியுள்ளார். அவர்களின் ஈடுஇணையற்ற தியாகத்தை கௌரவிக்கும் வகையில் விருதுகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரொனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சிறப்பான முறையில் கையாண்டு வரும் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு பிரதமர் மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். சிவில் சர்வீஸ் தினம் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மோடி அனைத்து சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்தியா கொரொனா வைரஸ் பரவலை தோற்கடிக்க உறுதியாக இருக்கும் சிவில் சர்வீஸ் பணியாளர்களை பாராட்டுவதாகவும் அவர்களை நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிவில் சர்வீஸ் பணியாளர்கள் மிக வலிமையாகவும் உறுதியாகவும் நிர்வாகத்தை கையாள்வதாக பதிவிட்டிருக்கிறார்.






