தமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு… திருப்பூர், நாமக்கல், நீலகிரி, ஈரோடு தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் எண்ணிக்கை விறுவிறு!!
தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, உயிரிழப்பும் 38 ஆன நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 704 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று திருப்பூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி தவிர்த்து எஞ்சிய அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடு கிடுவென அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் கடந்த 4 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தினமும் 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகின்றது. தமிழகத்தில் இன்றும் மிகவும் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 31,361 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 38 பேர் உயிரிழந்தனர். இதில் 14 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை 704 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக இதுவரை தமிழகத்தில் 8,61,211 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் மட்டும் 32,186 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2396 ஆக பதிவான் நிலையில் சென்னையில் மட்டும் 1254 ஆக பதிவாகியுள்ளது.
அடுத்தபடியாக செங்கல்பட்டில் 181, திருவள்ளூரில் 131, திருவண்ணாமலையில் 125, மதுரையில் 90, காஞ்சிபுரத்தில் 87, ராணிப்பேட்டையில் 67, தூத்துக்குடியில் 46, சேலத்தில் 40 என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே இன்று தொற்று எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.






