ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வில் பட்டதாரி ஆசிரியர்கள் 62 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு கடந்த ஜூலை 4ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூலை 5ஆம் தேதியும் மொத்தம் 835 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இடைநிலை ஆசிரியர் தேர்வை 58 ஆயிரத்து 902 பேர் எழுதிய நிலையில், அதில் 47 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்றனர். அதேநேரம் பட்டதாரி ஆசிரியர் தேர்வை எழுதிய ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 617 பேரில், 60 ஆயிரத்து 732 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ 62 சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in மூலம் 5 நாட்களுக்குள் தங்களது தகுதிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




