முதலமைச்சர் எந்த கேள்விக்கும் பதிலளிப்பதில்லை. – உதயநிதி ஸ்டாலின்
விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்ய நிதி இல்லை எனக் கூறும் தற்போதைய அரசு, எம்எல்ஏக்களுக்கு கார் தருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சனம் செய்தார்.
பட்டுக்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “கடந்த சில மாதங்களாகவே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடிக்கடி வந்துகொண்டிருக்கிறேன்.
கடந்த மூன்று மாதங்களில், நான்கு முறை வருகை தந்துள்ளேன். அப்படியே நான் வரவில்லை என்றாலும், இந்த அரசு என்னைக் கைது செய்து, அவர்களே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அழைத்து வருகிறார்கள். இரண்டு வாரங்களுக்குள் மூன்று முறை வந்துவிட்டேன். கடந்த 3-ஆம் தேதி என்ன நடந்தது என்பதை, நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். நாம் பேசவில்லை என்றாலும், பரவாயில்லை, கீழே இருந்து பேசி, நம்மை மாட்டிவிட்டுவிடுவார்கள்.
இன்றைக்கு அந்த மாதிரி அண்ணன் துரை.சந்திரசேகரன் சில வார்த்தைகளைக் கூறி, என்னை மாட்டிவிட்டிருக்கிறார். அதற்கும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும். பரவாயில்லை, இந்தக் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயந்தவன் கிடையாது, இந்த உதயநிதி என்பது இந்த அரசுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்.” என்றார். “கடந்த 3-ஆம் தேதி, தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். நான் தலைமை தாங்கி கடைசியாகப் பேசினேன்.
கிட்டத்தட்ட 22 நிமிடம் பேசியிருக்கிறேன். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னேன். அதுமட்டும் சொல்லவில்லை, இன்னும் நிறைய பேசியிருக்கிறேன். டம்மி முதலமைச்சர் என்றேன், ஒரு கேடுகெட்ட அரசாங்கம் அமைந்திருக்கிறது. ஒரு வெட்கங்கெட்ட முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு அமைந்திருக்கிறார் என்று சொன்னேன். தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே, அதையெல்லாம் செயல்படுத்துவதற்கு உங்களுக்கு வக்கில்லை என்று சொன்னேன். அதற்கெல்லாம், அவர்களுக்கு கோபம் வரவில்லை. காவிரியில் தண்ணி வரவில்லை என்று சொன்னதும், கோபம் வந்துவிட்டது. அதற்காக, என்னை இரவோடு இரவாக தஞ்சாவூரில் இருந்து காவல்துறையினரை அனுப்பி, அதிகாலையில் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். என்னைக் கைது செய்தார்கள்” என்று தெரிவித்தார்.
“காவல்துறை என்னைக் கைது செய்து, தஞ்சாவூருக்கு அழைத்து வருகிறார்கள் என்று தெரிந்தவுடன், டெல்டாவில் இருக்கின்ற அனைத்து உடன்பிறப்புகளும் தஞ்சையில் ஒன்று கூடிவிட்டீர்கள். அதனால், தஞ்சாவூர் சென்றால் நிச்சயம் நம்மால் சமாளிக்க முடியாது என்று, காவல்துறையினர் வண்டியை செங்கிபட்டி காவல் நிலையத்துக்குத் திருப்பிவிட்டார்கள். அதுமட்டமல்லாமல் நீதிமன்றத்தில் இந்த அரசு சென்று மன்னிப்பு கேட்டது. `நாங்கள் அவரை கைதெல்லாம் செய்யவில்லை, விசாரித்து விட்டுவிடுவோம்’ என்று பல்டி அடித்தார்கள்.
நம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று, `கைது செய்யக் கூடாது’ என்று, அவர்களின் வாதங்களை எடுத்துவைத்தார்கள்.இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த டெல்டா மண்டலம் என்றைக்குமே `திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை’ என்பதை நாம் மீண்டும் நிரூபித்துள்ளோம். ஏற்கனவே, சட்டமன்றத் தேர்தலில் புரிய வைத்தீர்கள். நண்பர் அன்பில் மகேஷ் பேசும்போது குறிப்பிட்டுப் பேசினார். டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற சுமார் 30 தொகுதிகளில், வெறும் 4 தொகுதிகள் மட்டும்தான் இப்போது இருக்கின்ற ஆளுங்கட்சி வென்றுள்ளார்கள்.” என்று பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




