முதலமைச்சர் விஜய் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக..!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று அழைப்பு விடுத்துள்ள தமிழ்நாடு எம்பிக்கள் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் புறக்கணித்துள்ளன. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவால், தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கத் தமிழக எம்பிக்களின் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்பிக்களுக்கும் தமிழ்நாடு இல்லம் மூலம் அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமானால் மேகதாது அணை விவகாரம் குறித்தும் விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக நிபந்தனை விதித்துள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், மேகதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துவிட்டு தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது என விமர்சித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அதிமுகவும் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதேநேரம் அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் டெல்லியில் இருக்கின்றனர். இதன்மூலம் அவர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் திமுகவும் புறக்கணிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்தார். தவெக நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என கனிமொழி கூறியிருக்கிறார்.
மேலும் மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கனிமொழி கூறியிருக்கிறார். இப்படி திமுக, அதிமுக புறக்கணித்துள்ள நிலையில் இக்கூட்டத்தில் தவெக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உடன் விசிக எம்.பி.க்கள் பங்கேற்கவுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




