மாணவர்கள் போராட்டத்துக்கு நடிகை ஜோதிகா ஆதரவு!
“மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என நடிகை ஜோதிகா தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் சென்றது டெல்லியை உலுக்கியது மட்டுமல்லாது, நாடு முழுவதையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
இதையடுத்து, டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என வலியுறுத்தியதாகவும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தர்மேந்திர பிரதான் ராஜினாமா விவகாரத்தில் சமரசத்திற்கு இடமில்லை என அமைச்சர்களிடம் உறுதிபட தெரிவித்துள்ளதாகவும் கரப்பான்பூச்சி கட்சியினர் தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், கோரிக்கைகள் குறித்து அரசு எடுத்த முடிவுகளை இன்று பிற்பகல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டார். இந்த சூழலில் டெல்லி ஜந்தர் மந்தரில் பேசிய கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மாணவர்களின் போராட்டத்திற்கு பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என நடிகை ஜோதிகா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில், “களத்தில் போராடும் மாணவர்களுடன் துணை நிற்கிறேன். நமது தேசத்தின் எதிர்காலத்திற்கும் ஆதரவாக நிற்கிறேன்.
நான் ஜனநாயக இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கிறேன். நான் சீர்திருத்தப்பட்ட கல்விக்கு ஆதரவாக நிற்கிறேன். சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே மற்றும் சௌரவ் தாஸ், ஒரு தாயாக எங்கள் குழந்தைகள் உங்களைப் போல வளர வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஜென் Z இளைஞர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியதற்கு பெருமைப்படுகிறேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “நாம்தான் இந்தியா” என்பதை நிரூபித்துள்ளீர்கள். அழுத்தங்களையும் பயத்தையும் உடைத்தெறிந்ததற்கு நன்றி. எங்களை அச்சமின்றி பேசத் துணிவூட்டியதற்கு நன்றி. ஜெய் ஹிந்த்!” என்று டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




