--- --:--:-- --

நாங்குநேரி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு..!

5

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில், திங்கள்கிழமை இரவு புகுந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் நடத்திய வெறியாட்டத்தில் மாற்றுத்திறனாளி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், பதற்றத்தைத் தணிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து இந்திராகாலனி பகுதியில், திங்கள்கிழமை இரவு பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல் நடத்திய வெறியாட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

திங்கள்கிழமை இரவு பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு தேநீர்க்கடை அருகே பொதுமக்கள் நின்றுகொண்டிருந்தபோது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

 

அத்துடன் நிற்காமல், கையில் வைத்திருந்த அரிவாள்களால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இந்த கும்பல் அடுத்துள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள்ளும் புகுந்து அங்கிருந்தவர்களையும் தாக்கிவிட்டு, ஒரு இருசக்கர வாகனத்தைத் திருடிக்கொண்டு தப்பியுள்ளது.

 

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஜான் மார்க் (45) என்ற மாற்றுத்திறனாளி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா (50) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெல்சன், பிரபாகரன், ராமசாமி, கணேசன் மற்றும் சசிகுமார் ஆகிய 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கவலைக்கிடமான நிலையில் உள்ள நெல்சன் மற்றும் கணேசன் ஆகியோருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் மற்றும் எஸ்.பி. பிரசன்னகுமார் ஆகியோர் விசாரணையைத் தொடங்கினர். கொலையாளிகளைப் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி நள்ளிரவில் நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.தற்போது நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். ஏர்வாடி செல்லும் வழித்தடங்களில் இரண்டாவது நாளாகப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

 

இந்நிலையில், நாங்குநேரியைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தின் பின்னணி மற்றும் திட்டமிட்ட சதி குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.பி. பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon