குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு..!
இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அவையில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், தற்போதைய பருவநிலை மாற்றங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய சவால்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் தாக்கல் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பொதுவாக வார இறுதி நாட்களில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றாலும், பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு இன்றைய தினம் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) ஆகியவை சிறப்பு வர்த்தக நாளாக அறிவித்துள்ளன. இதன் மூலம் காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை வழக்கம்போல பங்குச் சந்தை வர்த்தகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கான புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சாமானிய மக்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த அறிக்கையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




