மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்.. முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை!
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி, சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து மற்றும் நடராசன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழுக்காக இன்னுயிர் நீத்தவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி, தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளாக தமிழ்நாடு அரசால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை மூலக்கொத்தளத்தில் மொழி போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவிய முதலமைச்சர் ஸ்டாலின், நினைவிடம் முன்பு வீரவணக்க முழக்கங்களையும் எழுப்பினார். மேலும், எழும்பூரில் தாளமுத்து மற்றும் நடராசனின் சிலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை என்று பதிவிட்டுள்ளார். மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்று திரண்டு போராடியது என்றும், திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது என்றும், நம் தமிழுணர்வும் சாகாது என்றும் கூறியுள்ள முதலமைச்சர், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




