தேமுதிகவினர் காதில் பூ! *பேரம் படியாததால் பிரேமலதா கூட்டணி சஸ்பென்ஸ்..! * உப்பு சப்பின்றி முடிந்த தேமுதிகவின் கடலூர் மாநாடு

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஜனவரி 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இதுவரை பூச்சாண்டி காட்டி வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, வழக்கம்போல் கூட்டணியை அறிவிக்காமல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். இதனால், தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பேரம் படியாததால்தான் தேமுதிக தனது கூட்டணியை அறிவிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

 

ஜனவரி 9 ஆம் தேதி…! தமிழ்நாட்டு அரசியல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் குறிப்பாக தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நாள். காரணம், “தேர்தலில் எங்கள் கூட்டணியை ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன்!” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இத்தனை மாதங்களாகச் சொல்லி வந்த வாக்குறுதி!

 

ஆனால், கடலூர் மாநாடு முடிந்தது; தேமுதிகவின் தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன்தான் வீடு திரும்பினர். எந்த கூட்டணியில் சேரப்போகிறது தேமுதிக என்று கடைசிவரை பிரேமலதா சொல்லவே இல்லை! வழக்கம்போல, ஆளும் கட்சியையும், ஆண்ட கட்சியையும் சாடிவிட்டு, “நாங்கள் தான் கிங் மேக்கர்! நாங்க கூட்டும் கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும்!” என்ற ரீதியில் அதே பழைய பஞ்சாங்கத்தை வாசித்துவிட்டுப் போயிருக்கிறார். தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றமா, எரிச்சலா என்று பிரித்து அறிய முடியாத ஒரு கலவையான உணர்வு.

பேரம் படியல… பில்டப் குறையல!

 

உண்மையில், “பேரம் படியாததால்தான் தேமுதிக கூட்டணியை அறிவிக்கவில்லை,” என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பரவும் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ். சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக, அதிமுக அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த பின்னரும், தேமுதிக மட்டும் மதில்மேல் பூனையாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

 

திமுக, அதிமுக என இரு திராவிடக் கட்சிகளுமே தேமுதிகவின் 4 முதல் 5% வாக்கு வங்கியை சத்தமில்லாமல் உள்ளிழுக்கத் துடித்தன. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் ஒரு பக்கம் தலைவலி கொடுக்க, தேமுதிக வந்தால் கொஞ்சம் ‘சப்போர்ட்டாக’ இருக்கும் என்ற எண்ணம். அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கோ, எப்படியும் திமுகவுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்து ஸ்டாலினை வீழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயம். எப்படியும் தேமுதிகவை இழுத்தால் கணிசமாக வெல்லலாம் என்பது அவரது அரசியல் கணக்கு.

 

திடீர் மவுசு கூடிவிட்டதால், தேமுதிகவின் ‘பேரம் பேசும் குரலும்’ உயர்ந்தது. பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோரின் ‘ரவுசும்’ அதிகரித்தது. “அதிக தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், அத்துடன் ஆட்சியில் பங்கு” – இதுதான் பிரேமலதாவின் இப்போதைய எதிர்பார்ப்பு.

 

இரு கட்சிகளை சாடிய பிரேமலதா

 

தேர்தல் பேரம் பேசுவதற்கு முன், தன் பலத்தை நிரூபிக்க பிரேமலதா ஒரு ‘செண்டிமெண்ட் அஸ்திரத்தை’ கையில் எடுத்தார். அதுதான் விஜயகாந்த் முதலில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகில் நடந்த மாநாடு.

 

ஜனவரி 9-ம் தேதி கடலூர் பாசாறு கிராமத்தில் நடந்த மாநாட்டில், பிரேமலதா வழக்கம்போல் அனல் தெறிக்கப் பேசினார். “இந்த கடலூர் மாவட்டம், விஜயகாந்தின் கோட்டை. தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது; தேமுதிக எங்கு கூட்டணி வைக்கிறதோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும்,” என ஒரு பக்கம் ஓவர் பில்டப் ஏற்றினார்.

 

ஆனால், கூட்டணி அறிவிப்பு குறித்துப் பேசியபோதுதான் பிரேமலதாவின் உண்மையான ‘நெருக்கடி’ வெளியே தெரிந்தது. “தேமுதிகவை வெச்சு ஜெயிச்சுப்பீங்க… பயன்படுத்துவீங்க… ஆனால் தேமுதிகவுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கமாட்டீங்களா?” என்று அவர் பேசியது, திராவிடக் கட்சிகள் தங்கள் பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த தொகுதிகளைக் கொடுக்க மறுத்துவிட்டன என்ற ஏமாற்றத்தையே அப்பட்டமாகக் காட்டியது.

 

“ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் கூட்டணி குறித்து அறிவிக்காத போது நாமும் நின்று நிதானமாக அடிப்போம். தெளிவாக சிந்தித்து விரைவில் மகத்தான வெற்றி கூட்டணியை அறிவிப்போம். இதுவரை சத்ரியனாக இருந்தோம்; இனி சாணக்கியனாக இருப்போம்” என்று கூறி, தன் வாக்குறுதியில் இருந்து நழுவி, சஸ்பென்ஸ் வலையை மேலும் நீட்டிவிட்டார்.

 

அடுத்து, பிரேமலதாவின் வாரிசு விஜயபிரபாகரன் பேசியதுதான் உச்சகட்ட ஹைலைட். இணையத்தில் அவரது உரையைத் தேடிப் பார்த்தால், “தேமுதிக என்றாலே பேரம் என்று பேசுகிறீர்கள். யாருடா நீங்கள் எல்லாம். ஆமாம் நாங்கள் பேரம் பேசுகிறோம். அது சீட்டு பேரம் ” என்று மாநாட்டில் கொந்தளித்தார். இந்த பேச்சுகள், ‘விஜயபிரபாகரன் இவ்வளவு அழுத்தமாகப் பேசுவதற்கு என்ன காரணம்? உண்மையில் பேரம் படியவில்லையா?’ என்ற கேள்வியை எழுப்பியது.

 

ஈகோவும், நோட்டுப் பேரமும்!

கூட்டணி அறிவிப்பு ஏன் வரவில்லை என்று தேமுதிக வட்டாரங்களில் விசாரித்தால், திராவிடக் கட்சிகள் இரண்டும் பிரேமலதா எதிர்பார்த்த தொகுதிகளை வழங்க மறுத்துவிட்டன. “ஆட்சியில் பங்கு” என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டனராம். ராஜ்யசபா சீட் பற்றிப் பேசுவதையும் இரு கட்சிகளுமே தவிர்த்ததால், பிரேமலதா வெறுப்படைந்து மாநாட்டில் தன் ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

 

அதேபோல, நடிகர் விஜயின் தவெகவுடன் கூட்டணி சேர்வதிலும் பிரேமலதாவுக்கு ஈகோ. “நேற்று வந்த விஜயுடன் நாங்கள் கூட்டு சேருவதா?” என்று அவர் தரப்பு சத்தமில்லாமல் புலம்புகிறதாம். தேர்தல் சீட்டுப் பேரம் மட்டுமின்றி, “நோட்டுப் பேரமும்” இன்னமும் படியாததால்தான் மாநாட்டை நடத்தி முடித்தாலும் கூட்டணியை அறிவிக்க முடியாமல் தேமுதிக தலைமை திணறுகிறது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

 

இப்படி அனைத்து கட்சிகளிடமும் ‘ஓவர் பில்டப்’ காட்டி, “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற கதையாக பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் பேசியது, திமுக-அதிமுக தலைவர்கள் மத்தியில் லேசான எரிச்சலைத்தான் ஏற்படுத்தியிருக்கிறதாம்.

 

எப்படியோ, ஜனவரி இறுதிக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளதால், பொங்கலுக்குப் பிறகு, தேமுதிகவின் ‘மதில்மேல் பூனை’ நிலை மாறுமா, இல்லையா என்பது தெரிந்துவிடும்! அதுவரை, தொண்டர்களுக்கு சஸ்பென்ஸும், தலைவர்களுக்குத் தொடர் ‘பேரம் பேசும் காய்ச்சலும்’ நிச்சயம்.


Leave a Reply