--- --:--:-- --

தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

1

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், அதன் மீது முடிவெடுக்கும் போது, தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கும், திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி கோரி கர்நாடகா தாக்கல் செய்த மனுவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, மேகதாதுவில் அணை கட்டுவது உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானது என்று வாதிட்ட தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, இதனால், தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நீர் பாதிக்கப்படும் என்று கூறினார்.

 

பின்னர் வாதிட்ட கர்நாடக அரசு தரப்பு, காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்போதும் மிகைப்படுத்தி கூறி வருவதாக தெரிவித்தது.
இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கோருவதை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து, தமிழ்நாடு தேவையின்றி அச்சப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியது.

 

எனவே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், அதன் மீது முடிவெடுக்கும் போது தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றின் கருத்தை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 

மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்கவில்லை என்றால், அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

காவிரியில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீரை திறக்காவிட்டால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள அரசுகள் காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon