கரூர் சம்பவம்: முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் – முதலமைச்சர்
கரூர் துயர சம்பவத்தில் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையைத் தொடங்கும் என்றும் இதன்மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார். பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை வடிவமைப்போம் என்று கூறியுள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்க ஒன்றிணைவோம் என்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




