செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு!
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். அதற்கு 10 நாட்கள் கெடு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் இன்று மனம் திறந்து பேசப் போவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க வந்த செங்கோட்டையனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும். இந்த கருத்தை நான் உட்பட 6 மூத்த தலைவர்கள் எதிர்கட்சி தலைவரிடம் எடுத்து சொன்னோம். ஆனால் அதை அவர் ஏற்கும் மனநிலையில் இல்லை. மறப்போம், மன்னிப்போம் என்பதை நினைவில் வைத்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த மனநிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவோம். யார் யாரைச் சேர்த்துக் கொள்ளலாம் என பொதுச் செயலாளர் முடிவு எடுக்கலாம். வெளியே சென்றவர்கள் பலர் அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள்.
தென் மாவட்ட மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்றால் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பது கட்டாயம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. மேலும், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரட்டை தலைமையில் செயல்பட்டுவந்த அதிமுகவை மீண்டும் ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவந்து, அதிமுகவின் பொதுச் செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி.
பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இதனையடுத்து, ஓபிஎஸ் ஒரு அணியாகவும், டிடிவி தினகரன் புதிதாக அமமுக எனும் கட்சியை துவங்கி அவர் தனியாகவும், ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, தண்டனை முடிந்து சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தனியாகவும் இயங்கிவருகின்றனர்.
சமீப காலமாகவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும் எனும் கருத்தை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முக்கிய தலைவருமான செங்கோட்டையன் அதே கருத்தை முன்வைத்திருப்பது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “செங்கோட்டையன் அவரது முடிவை சொல்லி இருக்கிறார். ஆனால், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பதே எங்கள் முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




