திருப்பூருக்கு ஜாக்பாட்.. துணை ஜனாதிபதி ஆகும் சி.பி.ஆர்.. அதிமுக சந்தோஷம், திமுகவுக்கு சங்கடம்.. பாஜகவின் தேர்தல் வியூகம் கை கொடுக்குமா?
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது. சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு சி.பி.ஆர்.ஐ பாஜக அறிவித்ததால் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உற்சாகமடைந்துள்ளன; மாறாக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், ஜூலை 22ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வரும் 9ஆம் தேதி, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவித்ததுமே, அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஆளும் பாஜக தரப்பும், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியிம் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத், கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட், சிக்கிம் ஆளுநர் ஓம் மாத்தூர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா உள்ளிட்டோரின் பெயர்களை பாஜக பரிசீலனை செய்தது.
இதன் இறுதியில்தான் சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ளார். அதற்கு முன்பாக ஜார்க்கண்ட் ஆளுநராகவும், சில காலம் ஆந்திரா- புதுச்சேரி ஆளுநராக தற்காலிக பொறுப்பும் வகித்துள்ளார்.
திருப்பூரை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்றவர். இங்குள்ள தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரிடமும் கட்சி வேறுபாடு இல்லாமல் நட்பை வைத்துள்ளவர். சி.பி.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் சி.பி. ராதாகிருஷ்ணனின் பின்னணியை இனி நாம் பார்க்கலாம்.
கடந்த 1957ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி திருப்பூரில் பிறந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இளம் வயதில் படிப்பைவிட அரசியல் மீதே சி.பி.ஆர்.க்கு நாட்டம் இருந்தது. குறிப்பாக தனது தேசபக்தியால் வலதுசாரி இயக்கங்கள் மீது இவருக்கு ஈர்ப்பு உண்டானது. அதனால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து சேவையாற்றத் தொடங்கினார்.
பின்னர் கட்சி பணிக்காக பாஜகவுக்கு அனுப்பப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், திருப்பூரிலும் கோவையிலும் பாஜகவை வலுவாக்கும் முனைப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சி.பி.ஆர். உள்ளிட்டோரின் கடும் உழைப்பால் கொங்கு மண்டலத்தில் பாஜக படிப்படியாக வலுப்பெறத் தொடங்கியது.
சிபிஆரின் உழைப்பை கண்கூடாக பார்த்த பாஜக தலைமை, அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தந்தது. அதன்படி, 1998ஆகிய மக்களவை தேர்தல்களில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். அதன்பிறகு போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் இரண்டாம் இடமே பெற்றார்.
கடந்த 2014 தேர்தலில் பாஜக தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டது. திமுக, அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளின் துணையின்றி தனித்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன், 3.8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூப்பித்துக் காட்டினார்.
கடந்த 1990 முதல் 1995 வரை, மீண்டும் 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரானார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் சி.பி ராதாகிருஷ்ணன் தேசிய கயிறு வாரியத் தலைவரானார்.
அதுமட்டுமின்றி பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை சிபிஆர் வகித்து வந்துள்ளார். 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் நிலையில்தான் சி.பி.ராதாகிருஷ்ணனை, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா நேற்றிரவு அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள சி.பி. ராதகிருஷ்ணன், “தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக என்னை அறிவித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும், தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் நான் வார்த்தைகளால் நெகிழ்றேன், மகிழ்ச்சி அடைகிறேன். எனது கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் சி.பி. ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் அளித்த பேட்டியில் “என் மகன் பிறந்த போது முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போல் வரவேண்டும் என ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டேன். அவரது நினைவாகவே என் மகனுக்கு ராதாகிருஷ்ணன் என்று பெயர் வைத்தோம். இப்போது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் அந்த கனவும் நிறைவேறும் தருணமாக மாறி உள்ளது” என்று பூரிப்புடன் தெரிவித்தார்.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக திடீரென பாஜக அறிவித்ததன் பின்னணியை, குற்றம் குற்றமே அரசியல் பிரிவு குழு ஆராய்ந்தது. இதில் பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் பெயரை பாஜக அறிவித்திருப்பது, வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டுதான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
பொதுவாக, குடியரசுத் தலைவர் பதவிக்கு வட மாநிலத்தை சேர்ந்தவரை நிறுத்துவதும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தென் மாநிலத்தவரை நிறுத்துவதும் வழக்கம். அதுமட்டுமின்றி, முக்கியமான பதவிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும்போது, அடுத்தடுத்து வரும் தேர்தல்களை மனதில் கொள்வது பாஜக தலைமை வேட்பாளர்களை தேர்வு செய்வது வழக்கமான ஒன்று. எனவே, 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழக வாக்காளர்களை கவரும் வகையில் சிபிஆர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதுதவிர, தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்று மேடைகள் தோறும் திமுக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், சிபிஆரை நிறுத்தி, தமிழகத்திற்கு பாஜக முக்கியத்துவம் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, அக்கட்சிக்கு இது உதவலாம். ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்பி கூட பாஜகவுக்கு இல்லையென்றாலும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல். முருகன் என 3 தமிழகர்கள் மத்திய அமைச்சரவையில் இடத்தை பாஜக தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாஜக நன்கு வளர்ந்துள்ள பிராந்தியம் கோவை. கொங்கு மண்டலத்தை சேர்ந்த அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தவரை பாஜக அதிவேக வளர்ச்சியை கண்டுவந்தது. ஆனால், கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமி போட்ட நிபந்தனையை அடுத்து அண்ணாமலையை பாஜக தலைமை மாற்றியது. இதனால், பாஜகவினர் குறிப்பாக கொங்கு மண்டல பாஜகவினர் உற்சாகமிழந்து உள்ளனர். அவர்களின் அதிருப்திக்கு மருந்தாக, இப்போது சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது.
இதையெல்லாம் விட பெரிய அரசியல் கணக்கு இதில் உள்ளது. சி.பி. ஆரை வேட்பாளராக அறிவித்து திமுகவுக்கு பாஜக நெருக்கடி தந்துள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். ஆனால் தமிழரான சி.பி.ஆரை ஆதரிக்காமல்விட்டால், அது பெரும் அவப்பெயரை ஏற்படுத்தலாம்; இதை வைத்து அதிமுக- பாஜக கூட்டணி கட்சியினர் அரசியல் செய்யலாம். எனவே, திமுகவுக்கும் இது பெரும் சங்கடத்தை தந்துள்ளது.
மாறாக, சிபிஆரை வேட்பாளராக அறிவித்ததன் மூலம் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு உற்சாகம் பிறந்துள்ளது. இது தேர்தல் வெற்றிக்கு உதவும் என்று அதிமுகவும் சந்தோஷத்தில் உள்ளது.
கொங்கு மண்டலத்தை தனது பலமாக பார்க்கும் பாஜக, அதே பகுதியை சேர்ந்தவரை குடியரசு துணை தலைவராக்குவதன் மூலம், சட்டமன்றத்திற்கு கூடுதல் உறுப்பினர்களை அனுப்ப முடியும் என்று நம்புகிறது. பாஜகவின் அரசியல் கணக்கு கைகொடுக்குமா என்பது வரும் தேர்தலில் தெரியவரும்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





