திருப்பதியில் லட்டு வழங்க புதிய வசதி அறிமுகம்..!
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் பெறுவது இனி மிகவும் எளிதாகிவிட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களுக்கு விரைவாகவும், வெளிப்படையாகவும் லட்டுகளை வழங்க புதிய QR குறியீடு அடிப்படையிலான ஸ்கேனிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேபோல், விரைவில் விஐபி தரிசன டிக்கெட்டுகளையும் இதே முறையில் பெறும் வசதி வரவுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகமான திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பக்தர்களுக்கு மேலும் ஒரு புதுமையான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, லட்டு கவுண்டர்களில் கியோஸ்க் இயந்திரங்கள் மூலம் பக்தர்கள் கூடுதல் லட்டுகளை எளிதாகப் பெறலாம்.
இதுவரை நீண்ட வரிசையில் காத்திருந்து லட்டு பெற்று வந்த பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கி பங்களிப்புடன் ஐந்து பிரத்யேக ஸ்கேனிங் இயந்திரங்கள் லட்டு கவுண்டர்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம், பக்தர்கள் தங்கள் ஆதார் விவரங்களை பதிவு செய்து, QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் விரைவாக லட்டுகளைப் பெறலாம்.
இந்த புதிய முறை லட்டு விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான இந்து வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில், வெங்கடேஸ்வரா என்றும் பாலாஜி என்றும் பக்தர்களால் வணங்கப்படும் பெருமாளின் உறைவிடமாக உள்ளது.
இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப் பிரசித்தி பெற்றது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இந்த லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. TTD நிர்வாகம், சில சர்ச்சைகளுக்குப் பிறகு, லட்டு விநியோகத்தில் தற்போது மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
புதிய லட்டு விநியோக முறையும், விரைவில் வரவிருக்கும் விஐபி தரிசன டிக்கெட் பெறும் வசதியும் பக்தர்களுக்கு மேலும் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




