பெங்களூரு கூட்டநெரிசல் துயரம்.. ஆர்.சி.பி. அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு..!
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்.சி.பி அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
இதனையடுத்து, பெங்களூருவில் நேற்று வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆர்.சி.பி. அணி ரோடு ஷோ நடத்தினால் பெரிய அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ரோடு ஷோவுக்கு கர்நாடக அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆர்.சி.பி. அணிக்கு மட்டும் பாராட்டு விழாவாக சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதே நேரத்தில், மைதானத்திற்கு வெளியே இலட்சக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஆர்.சி.பி. அணி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட குற்றச்சாட்டின்பேரில் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூ மோட்டோ அடிப்படையில் பெங்களூரு போலீசார் தானாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்கள்.இதேபோன்று டிஎன்ஏ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அமைச்சரவை கூடி, சிஐடி விசாரணைக்கு உத்தரவிடலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டது.
இதன் முடிவில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாரதீய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 105வது பிரிவு உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை (FIR) தவிர, இந்த சம்பவத்தை விசாரிக்க கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதி ஜி. ஜெகதீஷா, இன்று கர்நாடக கிரிக்கெட் சங்கம், பெங்களூரு மெட்ரோ மற்றும் RCB உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.





