2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023 செப்டம்பரில் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 மாற்றம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி இந்த தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.தமிழகத்தில் தற்போதுள்ள 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகளில், இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடி 14 லட்சம் குடும்பத் தலைவிகள் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர்.எனவே மீதம் உள்ள தகுதியான குடும்ப அட்டைகளுக்கு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் ஜூன் முதல் வாரம் முதல் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழகத்தில் வரும் மே 29ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனுக்களை பெற வரும் மே மாதம் 29ஆம் தேதி முகாம்கள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.