தமிழ்நாட்டில் வரும் 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் வரும் 22ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் மழை பெய்து வெப்பதை தணித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டியது. விளமல், மாப்பிள்ளை குப்பம், சன்னாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்தது.பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழைப் பொழிந்தது.
உதகை அருகே மசினக்குடியில் திடீரென சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. இதில் 5 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு ஒருமணி நேரம் மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. மரம் விழுந்ததில், குடியிருப்புப் பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் மற்றும் ஜீப் ஆகியன சேதமடைந்தன.சென்னையில் நகரின் முக்கிய பகுதிகளில் திடீரென்று கனமழை பெய்தது.
வடபழனி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்தது. கோயம்பேடு காய்கறி சந்தையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மழைநீர் குளம்போல் தேங்கியது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ஒரு அடி அளவிற்கு நடைபாதையில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்களும், வியாபாரிகளும் இன்னலுக்கு ஆளாகினர்.
மேடவாக்கத்தில் ஒரு மணிநேரத்தில் அதிகபட்சமாக 12.75 சென்டி மீட்டர் அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தண்ணீர் தேங்கிய இடங்களில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் சிறிய மோட்டார் மூலம் நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




