--- --:--:-- --

22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறப்பு..!

1

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி 22 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்கள் கோவிலில் வழிபாடு செய்ய கோவில் திறக்கப்பட்டது.

 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள திரௌபதி அம்மன் கோவில் கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய வன்னியர் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இது மோதலாக மாறியது. பின்னர் கோவில் சீல் வைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலில் பட்டியலின மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டது.

 

நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வன்னியர் தரப்பு மக்கள் இன்று சாமி தரிசனம் செய்யவில்லை. வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். அம்மனுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாள் என்பதால் நாளை தரிசனம் உள்ளதாக உள்ளனர்.

 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அப்போது, பட்டியலின இளைஞர்கள் சிலர் கூட்ட நெரிசலில் தவறுதலாக கோயிலுக்குள் சென்றதாக தெரிகிறது.

 

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர் மட்டும் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தி வந்த நிலையில், பட்டியலின இளைஞர்கள் கோயிலுக்குள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் விக்கிரவாண்டி, கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கோயில் திருவிழாவின் போது தங்களிடம் வரி வாங்கப்படுவதாகவும், ஆனால் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் பட்டியலின மக்கள் குற்றம் சாட்டினர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக ஆதிக்க சாதியினர் 18 பேர் மீது வளவனூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் 6 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 

இதில், உடன்பாடு எட்டப்படாததால் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் திரௌபதி அம்மன் கோயில் தங்கள் தரப்பினருக்குதான் சொந்தமானது என ஆதிக்க சாதியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கோயில் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு முதல் கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஆதிக்க சாதியினருக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon