--- --:--:-- --

தீபம் தொடர்பான வழக்கு ஒரே நீதிபதியின் விசாரணைக்கு வருவது எப்படி? – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி

4

“கோயில் நிலம், தீபம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஒரே நீதிபதியின் விசாரணைக்கு வருவது எப்படி? அவர் விரும்பிக் கேட்டு இந்த வழக்குகளைப் பெறுகிறாரா? அவ்வாறு இருந்தாலும், குறிப்பிட்ட வழக்குகளை அவரிடம் மட்டும் விசாரணைக்கு ஒதுக்கீடு செய்வது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், “இதற்குத் தலைமை நீதிபதி விளக்கம் அளிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

விருதுநகரில் நடைபெற்ற வாக்குரிமை பாதுகாப்பு உறுதி ஏற்பு நிகழ்வில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. கோயில் நிலம், தீபம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஒரே நீதிபதியின் விசாரணைக்கு வருவது எப்படி? அவர் விரும்பிக் கேட்டு இந்த வழக்குகளைப் பெறுகிறாரா? அவ்வாறு இருந்தாலும், குறிப்பிட்ட வழக்குகளை அவரிடம் மட்டும் விசாரணைக்கு ஒதுக்கீடு செய்வது ஏன்? இதற்குத் தலைமை நீதிபதி விளக்கம் அளிக்க வேண்டும்.

 

எந்தெந்த வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உள்ளது. அப்படியிருக்க, இதுபோன்ற வழக்குகள் அனைத்தும் ஒரே நீதிபதியிடம் ஒப்படைக்கப்படுவதன் பின்னணியில் ஏதேனும் அழுத்தம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து விசாரிப்பது, உச்சநீதிமன்றத்தைவிட மேலான அதிகாரம் கொண்ட அமைப்பாகச் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

 

 

தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ளது. எனவே, நீதிபதி தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்த உள்ளோம்.

 

திருப்பரங்குன்றம் கோயிலில் வழக்கமான மரபு மற்றும் நடைமுறைகளின்படி தீபத் திருவிழா நடைபெற்றுள்ளது. கோயில் அறங்காவலர் குழுவினர் இணைந்து முடிவெடுத்து, வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றியுள்ளனர். தற்போது அந்த விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. தமிழக தொல்லியல் துறையின் தகவலின்படி, மாநிலம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட அளவைக் கற்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் திருப்பரங்குன்றத்தில் உள்ள அளவைக் கல். அது தீபத்தூணா அல்லது அளவைக் கல்லா என்பதை உரிய ஆய்வின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டிய நிலையில், இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்டப்படுவது ஏன்?
திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று சிலர் பேசுகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் தொடர்பான பிரச்சினையை மாநிலம் முழுவதற்குமான பிரச்சினையாகவும், தேசியப் பிரச்சினையாகவும் மாற்றியிருப்பது அவர்கள்தான்.

 

தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுதோறும் 175 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், கர்நாடக அரசு அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதுபோன்ற பல பிரச்சினைகள் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட கோயில் தீப விவகாரத்தை மட்டும் பெரிதுபடுத்தி, அதன் அடிப்படையில் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்று கோருவது எந்த வகையில் நியாயம்?

 

தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தலாம். ஆனால், அதற்காக ஒரு மாநில அரசைக் கலைக்க வேண்டும் என்று கோர முடியாது. மதரீதியான பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் சிலர் இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே அதன் அடிப்படைக் கோட்பாடு. இந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்காதவர்கள் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளனர். நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால்தான் அது இதுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த அளவுக்கு இடங்களைப் பெற முடியாததற்கு இந்தியா கூட்டணியின் பங்களிப்பு முக்கியமானது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முக்கியப் பங்கு உண்டு. தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் செயல்பட்டால்தான் தேர்தலும் ஜனநாயக முறையில் நடைபெறும். ஆனால், தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான உரிமையைப் பாதுகாப்பது மட்டுமின்றி, தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

 

நீதித்துறையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்தும் தற்போது பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீதித்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா அல்லது ஒன்றிய அரசின் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon