--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்திலிருந்து 2025 ம் ஆண்டு புனித பயணம் மேற்கொள்ளும் 165 புனித ஹஜ் பயணிகளுக்கான புத்தறிவு பயிற்சி முகாம்..!

11.1

முஸ்லீம்களின் ஐந்து முக்கிய கடமைகளில் 5 – வது கடமையான புனித ஹஜ் பயணத்தை வருடா வருடம் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 2025 ம் ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 5800 க்கும் மேற்பட்ட புனித ஹஜ் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

 

புனித ஹஜ் பயணம் செல்கையில், பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்க சென்னை, தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி சார்பில் ஹாஜிகளுக்கான புத்தறிவு பயிற்சி முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தி வருகிறார்கள்.

இதைதொடர்ந்து சென்னை, தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டி மற்றும் திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு சார்பில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 165 க்கும் மேற்பட்ட ஹாஜிகளுக்கான விளக்கவுரை பயிற்சி முகாம் திருப்பூர், காங்கேயம் ரோடு, எச்.எம்.எஸ். திருமண மஹாலில் நடந்தது.

 

புத்தறிவு பயிற்சி முகாம் தாராபுரம் அட்டவனை பள்ளிவாசல் ஹஜ்ரத் ரியாஜ் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு நிர்வாகி சையது ரியாஜ் தலைமை தாங்கி வரவேற்றார். திருப்பூர் பெரிய பள்ளிவாசல் அரபிக் கல்லூரி பேராசிரியர் அப்துல் முஜீப் பாகவி உம்ரா செய்வது குறித்தும், திருப்பூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹஜரத் சல்மான் பாரிஸ் பாகவி ஹஜ் செய்வது குறித்தும், அதன் சட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினர்.

இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டி நிர்வாகிகள் அப்துல் கரீம் ஹஜ் பயணிகள் வீட்டில் இருந்து புறப்படுவது, சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஜித்தா விமான நிலையம் அடைவது, சவுதியில் உள்ள மெக்கா, மதீனா, மினா ஆகிய இடங்களில் தங்குவது, மதீனாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புவது உள்பட பயண விதிமுறைகள், பயண ஆவணங்களின் முக்கியத்துவம், சவுதி அரேபியாவில் இந்திய துணை தூதரகத்தால் புனித பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பயணத்தின் போது வெவ்வேறு நிலைகளில் உள்ள சட்ட திட்டங்கள், சவுதி பயண ஏற்பாட்டாளர்களின் பங்கு மற்றும் சவுதி அரசின் கட்டுப்பாடுகள் முதலியன குறித்தும், மற்றொரு விளக்கவுரை பேச்சாளர் அக்பர் அலி மதினா ஜியாரத் குறித்தும் விளக்கி பேசினர். சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஜக்கரிய்யா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

 

தொடர்ந்து ஹஜ் பயணிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு சொசைட்டி நிர்வாகி முஹம்மது நஸ்ருதீன் பதில் அளித்தார். இதனைத்தொடர்ந்து புனித பயணம் வெற்றி அடைய சிறப்பு பிரார்த்தனை துஆ ஓதி முகாம் நிறைவு அடைந்தது. முடிவில் திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு நிர்வாகி சைபுதீன் நன்றி கூறினார்.முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு நிர்வாகிகள் சஃபியுல்லா, முஹம்மது ஆரிப், சாதிக் பாட்ஷா, பக்ருதீன், கோவை நூர் முஹம்மது, ரஹ்மத்துல்லா, பள்ளப்பட்டி அன்வர் அலி, ரிஜ்வான், ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து இருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon