--- --:--:-- --

எவ்வளவு நிதி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்..!

2

எவ்வளவு நிதி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாது என்ற மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து, தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

புதியக் கல்விக் கொள்கை இந்தியை திணிக்கிறது, குலக் கல்வியை ஆதரிக்கிறது, மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடத்தக் கட்டாயப்படுத்துகிறது, தொழிற்கல்விக்கு வழிகாட்டுகிறது உள்ளிட்ட விமர்சனங்களை முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

இந்நிலையில் சென்னை கொளத்தூரில் திமுக நிர்வாகி முரளிதரனின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மணமக்கள் மகேஷ்வர் – திவ்யகணபதி திருமணத்தை முதலமைச்சர் நடத்தி வைத்து வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மணமக்களின் பெயர் தமிழில் இல்லை என்பது சங்கடமாக இருப்பதாகக் கூறினார்.

 

எனினும் தம்பதியின் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் திமுக கட்சியை குடும்ப பாசத்தோடு உருவாக்கி தந்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். வாரிசு வாரிசு என்று சிலர் விமர்சித்து வருவதாகக் கூறிய முதலமைச்சர், தங்களுக்கு வாரிசு இருப்பதால் தான் வாரிசு என்று அழைப்பதாகவும் பதிலடி கொடுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon