அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடோலின் உள்ளரங்கில் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்பு விழா, இந்திய நேரப்படி, நேற்றிரவு 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டன் விழாக் கோலம் பூண்டது.
வெள்ளை மாளிகை மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னியது. பாரம்பரிய முறைப்படி, வெள்ளை மாளிகைக்கு வந்த டிரம்பை-யும், அவரது மனைவி மெலேனியாவையும், அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், கேபிடோல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார்.
கடும் குளிர் காணமாக, 45 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா உள்ளரங்கில் நடைபெற்றது. இதன்படி, பதவியேற்பு விழா நடைபெற்ற கேபிடோலில் Rotunda பகுதிக்கு டொனால்டு டிரம்ப், துணை அதிபராக தேர்வுசெய்யப்பட்ட ஜே.டி.வேன்ஸ் உள்ளிட்டோர் வந்தனர். இசைக் கருவிகள் முழங்க உலகமே உற்று நோக்கிய பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
முதலில், துணை அதிபராக ஜேடி வேன்ஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி Brett Kavanaugh பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பீரங்கி குண்டுகள் முழங்கச் செய்யப்பட்டன. பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.