திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், தீபத்திருவிழா அன்று பக்தர்களை மலைமீது அனுமதிப்பது குறித்து, வல்லுநர் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளது. ஃபெஞ்சல் புயல் எதிரொளியாக பெய்த கனமழையால், 2.,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மகாதீப மலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர்.
வரும் 13ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், மலையின் ஈரப்பதம் காரணமாக மகாதீபம் ஏற்றும் நாளில் பக்தர்களை மலை ஏற அனுமதிக்க வேண்டாம் என வனத்துறை தெரிவித்தது.இதனை அடுத்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்களுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இன்று வல்லுநர் குழுவை மலைமீது அனுப்பி ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்கள் மலையின் நிலையை ஆய்வு செய்ய இன்று செல்வார்கள் எனவும், அவர்களுக்கு உதவியாக பாதுகாப்பு உபகரணங்களுடன் காவல்துறையினர், மருத்துவர்கள், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவும் உடன் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், தீபத்திருவிழா அன்று மலை மீது பக்தர்களை அனுமதிக்கலாமா என தமிழ்நாடு அரசு முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.