மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!

காராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை ராஜினாமா செய்து மாநில ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து அடுத்த அரசு பதவி ஏற்கும்வரை காபந்து முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்தார். அதேசமயம், முதலமைச்சர் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் மகாராஷ்டிரா மகாயுதி கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

 

மகாராஷ்டிராவில் கடந்த ஆட்சியில் இருந்ததுபோலவே இந்த ஆட்சியிலும், இரு துணை முதல்வர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இரு துணை முதலமைச்சர்களாக அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என பேச்சுகளும் இருந்தன. இதில், ஏக்நாத் ஷிண்டே தனது மகனை துணை முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வைக்க காய் நகர்த்துவதாகவும் தகவல் வந்தது.

 

இதற்கிடையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று அதில், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில் இன்று, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ஆசாத் மைதானத்தில் புதிய அரசு மற்றும் முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

 

இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி தலைவரான சந்திரபாபு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.இந்த பதவி ஏற்பு விழாவில், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி ஏற்றனர்.